அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (23.12.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு வார காலம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக (2024-2025) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 18.12.2024 அன்று கற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் 5:3 என்ற வகையில் தமிழில் அமைத்தல், குறிப்பாணை நிகழ்ச்சியும், 19.12.2024 அன்று ஆட்சிமொழி சட்டம்ஃ வரலாறு, அரசாணைகள், மொழிப்பயிற்சி, மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கம் நிகழ்ச்சியும், 20.12.024 அன்று கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடு
நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வியாபார நிலையங்களில் பெயர்ப்பலகை தமிழ் மொழில் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அலுவலகங்களில் அனைத்து பதிவேடுகளும் தமிழில் பேணப்படவேண்டுமென்றும், அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்றும் வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி துவக்கி வைத்தார்.
இப்பேரணி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!, அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம்!, தனிமொழியானதும் தமிழே தாய்மொழியாதும் தமிழே, தமிழில் கையொப்பமிடுவோம் தமிழர் நாம் என்று பாடுவோம், அன்னைத் தமிழே ஆட்சித்தமிழே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.
தொடர்ந்து, வாகனங்களில் பெயர்பலகையினை தமிழில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவசரகால ஊர்தியில் ஒட்டு வில்லைகளை ஒட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும், 24.12.2024 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழிப் பட்டிமன்ற நிகழ்ச்சியும், 26.12.2024 அன்று தமிழ் அமைப்புகள், நிருவாகிகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்க கூட்டமும், 27.12.2024 அன்று தொழிலாளர் துறை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயரப்பலகை அமைத்தல் தொடர்பான கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.