Skip to content
Home » தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து, மாநாடு நடைபெறும் இடத்தைச் சமன்படுத்தி, முதல்கட்டமாக அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்தல், மேடைக்கான அடித்தள பைப்புகள் நடும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

மாநாட்டுக்கும் வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 250 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்த சாலையின் இருபுறமும் 50 ஏக்கர் அளவில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை அமைக்கும் பணி, சினிமா கலை அரங்க இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக ஏற்கெனவே அளித்திருந்த 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்திய காவல் துறையினர், தற்போது மீண்டும் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நேற்று முன்தினம் இரவு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மாநாட்டில் 1.5 லட்சம் பேர்பங்கேற்பார்கள், 50,000 நாற்காலிகள் போடப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். மேலும், 1,50,000 பேர்வரை மாநாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், ரசிகர்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பெருமளவு வரவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

இந்த மாநாட்டுக்கு, மாநிலத்தின் தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த விழுப்புரம்-சென்னை சாலையின் இடதுபுறத்தில் 28 ஏக்கர் இடமும்,கூடுதலாக 15 ஏக்கர் இடமும் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.வட தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த சென்னை-விழுப்புரம் சாலையோரம் 40 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

மாநாடு நடைபெறும் காலம், வடகிழக்குப் பருவமழைக் காலம்.அதிக மழை பொழிந்து வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது அவ்வாறான சூழலில், வாகனங்களை சிரமமின்றி நிறுத்த செய்யப்படவுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.மாநாட்டுக்குமாவட்டம் வாரியாக வரும் வாகனங்களின் (பேருந்து, வேன், கார்) விவரத்தை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!