தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம் நாட்டில் நிர்வாக மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. ஆனால், அதை கல்வித் துறையில் கண்மூடித்தனமாக நீட்டித்துக்கொள்ள முடியாது என்பதுதான் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதமாகும். இந்தியா பன்மொழித்துவத்தை நோக்கி நகர்வதற்கு பதிலாக, இன்றைய ஆட்சியாளர்களால் ஒற்றை மொழிச் சூழலை நோக்கிச் செல்கிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு, பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்தி எவ்வாறு உள்ளூர் மொழிகளை ஓரங்கட்டிவிட்டு, அந்தந்த மொழிகளை பேசும் மக்களின் பண்பாடு, வேலை என பல்வேறு துறைகளில் ஆக்கிரமித்துள்ளது என்பதை உணர வேண்டும்.
அதேபோல், உத்தரப்பிரதேசம் உட்பட பிற இந்திய மாநிலங்களில் இருப்பது மும்மொழிக் கொள்கை அல்ல. அங்கே பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது இந்தி எனும் ஒரு மொழிக் கொள்கைதான். தேவையெனில் சமஸ்கிருத்தை எடுத்துக் கொள்வார்கள். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் முதலில் நியாயமாக அவரவர் மாநிலங்களில் உள்ள மத்திய, மாநில அரசு வேலைகளில் இருந்தனர்.
அதன்பின்னர், இந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றினர். இப்போது இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்புகளையும் கைப்பற்றத் துடிக்கின்றனர். அதற்காக அவர்கள் ஆங்கிலமோ அல்லது அந்தந்த மாநில மொழிகளையோ படிக்கத் தயாரில்லை. மாறாக அவர்களுக்கு வசதியாக நாம் இந்தி படிக்க வேண்டுமாம்.
வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுக்கு வட மாநிலங்களை ஆட்சி செய்தவர்களே காரணம். அவர்களின் சமூகப் பொருளாதார தோல்விதான் கோடிக்கணக்கான இளைஞர்களை புலம்பெயர் தொழிலாளர்களாக ஆக்கியது.
நீண்டகாலமாக பாஜகவினர் இந்து – முஸ்லீம் பிளவுவாதத்தை உருவாக்கி அதில் பெரியளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இப்போது அந்த ஆயுதம் பழசாகிவிட்டது. எனவே அவர்கள் இந்தி பேசுபவர்கள் மற்றும் இந்தி பேசாதவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை திட்டமிட்டு கூர்தீட்டுகிறார்கள். இதன் பலனை வட இந்தியாவில் தேர்தலின்போது அறுவடை செய்ய முயல்வார்கள். ஆனால், இந்த முறை அவர்கள் நினைப்பது நடக்காது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இதுதவிர தமிழகம் கல்வி, பொருளாதாரம், தொழில், மருத்துவம் என பல துறைகளில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதற்கெல்லாம் தமிழகத்தின் கல்விக்கொள்கைகளும், இரு மொழிக் கொள்கையும்தான் காரணம். இது நன்றாக தெரிந்தும் இன்னும் பழைய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இந்தியாவின் முன்னேறிய மாநிலம் ஒன்றின் வெற்றி வரலாற்றை படிக்க மறுக்கும் ஆதிக்கவாதிகளின் மொழிக்கொள்கை என்பது உண்மையில் தோற்றுப்போன ஒன்று. அதை ஒருபோதும் தமிழகம் பின்பற்றாது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.