ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து நேற்று 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே தான் மீன்பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கை ராணுவம் அத்துமீறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தாலும் மத்திய அரசு அதை கண்டுகொள்வதில்லை என்பதால் இலங்கை அத்துமீறி தமிழர்களை கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்கிறது என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.