கோவை- தாம்பரம் ரயிலில் பொது பெட்டிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம்.தொடர் போராட்டம் அறிவித்த மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம்:- டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள் சென்னை சென்று வருவதற்கு காலை நேரத்தில் ரயில் வசதி இல்லாமல் பேருந்துகளையே நம்பி இருந்தனர். இதனையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக திருச்சியில் இருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் வழியாக சென்னைக்கு காலை நேரத்தில் ரயில் சேவை துவங்க தொடர் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருச்சி –
சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவை துவங்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம் எதிர்பார்த்ததை விட பொது மக்களிடமும் பயணிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்று லாபகரமாக ரயில் இயங்கி வருகிறது. இதனால் தஞ்சாவூர் மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களுக்குக்கும், வணிகர்களுக்குக் மிக பயனுள்ள ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 26-ஆம் தேதியுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக வந்த அறிவிப்பு மயிலாடுதுறை ரயில் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் தாம்பரம் -கோவை வாராந்திர ரயிலில் பொதுப் பெட்டிகள் நீக்கப்பட்டதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்டா பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருச்சி-சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிகள் ரயில் சேவையை நிரந்தரமாக்க வலியுறுத்தி மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதி பயணிகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.