ராமேஸ்வரம்- சென்னை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகளுக்காக 2006 ம் ஆண்டு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு சென்ற கம்பன் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது.
2019ல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னைக்கான இரவு ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா நடந்தது. விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தாம்பரம் – ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி இரவு நேர ரயிலை ராமேஸ்வரத்திலிருந்து
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ரயில் ராமேஸ்வரத்தில் நேற்று மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி வழியாக இரவு சரியாக இரவு 7.50 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது பேண்ட், வாத்தியம் முழங்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அனைத்து ரயில் பயணிகள் சங்கத்தினர் பட்டாசு வெடித்து, பேண்ட், வாத்தியம் முழங்க ரயிலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கார்டு ஆகியோருக்கு தஞ்சை எம்.பி முரசொலி சால்வை அணிவித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு(தாம்பரம்) தினசரி ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சரியாக இரவு 8 மணிக்கு ரயில புறப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே கமர்சியல் இன்ஸ்பெக்டர்
உதயசுகுமாரன் உள்ளிட்ட ரயில்வே உயரதிகாரிகள், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் மற்றும் ரயில் பயணிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட ரயில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு இன்று அதிகாலை சென்றது.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தஞ்சை எம்.பி முரசொலி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.