Skip to content

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான சரத் கமல் கூ றியதாவது:

“சென்னையில்தான் எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது மதிப்பு மிக்க ஸ்டார் கன்டென்டர் தொடருடன் சென்னையிலேயே எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்கிறேன்” என  தெரிவித்தார்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் அந்தஸ்தை மறுவரையறை செய்த மற்றும் எண்ணற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளித்த சரத் கமலுக்கு பொருத்தமான பிரியாவிடை அளிக்கும் டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடராக இருக்கக்கூடும். இந்தத் தொடரில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற சரத் கமல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நான்கு வீரர்களில் ஒருவராக இருப்பார். மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத் கமல், சினேஹித் சுரவஜ்ஜுலா உடன் இணைந்து தகுதிச் சுற்றில் விளையாட உள்ளார்.

 

சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப் பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். சரத் கமல் அளவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களில் யாரும் ஒலிம்பிக்கில் பங்கேற்றதில்லை. அவர், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று  உள்ளார்.
2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றார். 10 முறை தேசிய சாம்பியனான சரத் கமல், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் புரோ டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார், தற்போது டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் சொந்த மண்ணில் சாதனை படைத்து டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்யும் முனைப்புடன் உள்ளார்.

22 வருடங்களாக நாட்டின் முன்னணி வீரராக வலம் வரும் சரத் கமல், உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளின் ஜாம்பவான்களுக்கு எதிராக இந்திய டேபிள் டென்னிஸின் இருப்பை நிலைநிறுத்தியவர்.

மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் டேபிள் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதற்கான உயர்செயல் திறன் மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் இணைந்து பணியாற்ற சரத் கமல் முடிவு செய்துள்ளார். இந்த மையத்தின் வாயிலாக அடிமட்ட அளவில் விளையாட்டை வளர்த்தெடுக்கவும் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

 

 

error: Content is protected !!