அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர், இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய நிலையில், கற்றுக்குட்டியான அமெரிக்கா சூப்பர்-8ல் இடம் பிடித்து அசத்தியது. விறுவிறுப்பான இந்த சுற்றின் முடிவில், முதல் பிரிவில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், 2வது பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில்… ஆஸ்திரேலியா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.
முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன் வித்தியாசத்தில் போட்டுத்தாக்கிய இந்திய அணி பைனலில் நுழைந்தது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கும் பரபரப்பான பைனலில் இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதுகின்றன. இப்போட்டி, பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. 2007ல் நடந்த முதலாவது டி20 உலக கோப்பையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேலும், 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த எந்த உலக கோப்பையிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாதது, சோக வரலாறாகத் தொடர்கிறது. கடைசியாக 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்ட இந்தியா, அதன் பிறகு நடந்த ஐசிசி தொடர்களில் சாதிக்க முடியவில்லை. இந்த குறையை ரோகித் தலைமையிலான இந்திய அணி இன்று தீர்த்து வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.