இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் நேற்றிரவு இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு ஒப்பனரான ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பாக விளையாடி 52 ரன்களை குவித்தார். அதேநேரம் ஒன்டவுன் இறங்கிய ஜோஷ் இங்கிலிஷ் இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தார். நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்ட இங்கிலிஷ் சதம் அடித்து அசத்தினார். 50 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உடன் 110 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஜோஷ் இங்கிலிஷின் சதத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஓபனர்களாக களம்கண்ட நிலையில், முதல் ஓவரிலேயே ரன் எடுக்காமல் ருதுராஜ் ரன் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 21 ரன்கள் குவித்தாலும் 3வது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன்பின் இஷான் கிஷனுடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடினார். இருவருமே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி ரன் குவிப்பதை வேகப்படுத்தினர். இருவருமே விரைவாக அரைசதம் கடந்தனர். பின்னர் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷான் கிஷன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை தேடித்தந்தார். 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய தரப்பில், அதிகபட்சமாக தன்வீர் ஷங்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.
சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..
- by Authour
