இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில், இறுதி ஓவர் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றோம். கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் இலக்கு என்ற நிலையில், 11 ரன்கள் மட்டும் கொடுத்தார் அக்ஷர். சவாலான சூழ்நிலைகளை இந்த அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இது பெரிய ஆட்டங்களில் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா வலுவாக உள்ள இருதரப்பு ஆட்டங்களில் முடிந்தவரை சவால்களை எதிர்கொண்டால் வீரர்களுக்கு நன்மை” என்று கூறினார்.
அதே நேரத்தில் கடைசி ஓவரை அக்சர் பட்டேலிடம் கொடுத்த கேப்டன் பாண்டியாவின் முடிவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாண்டியாவுக்கும் ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் அதை அக்சர் பட்டேலிடம் கொடுத்து விட்டார். இந்தியாவின் வெற்றி மயிரிழையில் கிடைத்த வெற்றி. பாண்டியா கடைசி ஓவரை வீசியிருந்தால் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியோ புத்தாண்டின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.