கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக அந்த படகில் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 9 பேரும் சென்றனர். இந்த நிலையில் தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களும் தனுஷ்கோடி நோக்கி நீந்த தொடங்கினர்.
கடலில் நீந்த தொடங்கிய இந்த குழுவினர் நேற்று மாலை 3.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்து தங்கள் நீச்சல் சாதனை பயணத்தை நிறைவு செய்தனர். தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூர பயணத்தை 10 மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் (46), ராஜசேகர்துபர் (56), ஜெயபிரகாஷ் (56), சுமாரா (54) மஞ்சரி (46) சுஜாதா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சுமார் 23 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளனர். இதில் ஒரே நேரத்தில் அனைவரும் நீந்தாமல் முதலில் ஒருவர் நீந்த தொடங்கி அவர் முடிக்கும் இடத்தில் இருந்து அடுத்த வீரர் நீந்த தொடங்குவார். இதேபோன்று ஒரு வீரர் நீந்தி முடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு வீரர் மீண்டும் நீந்தும் வகையிலான நீச்சல் பயிற்சியில் நீந்தி இந்த குழுவினர் தனுஷ்கோடி வரை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.