சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய டிக்கெட் வாங்க சென்றுள்ளார். சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய 50 ரூபாய் டிக்கெட் வாங்க சென்றுள்ளார். 3 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைப் பெற 150 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் டிக்கெட் விற்பனை செய்யும் நபர் இரண்டு 50 ரூபாய்க்கான டிக்கெட்டையும், ஒரு 5 ரூபாய்க்கான டிக்கெட்டையும் நீதிபதியிடம் கொடுத்துள்ளார். தவறுதலாக டிக்கெட் வழங்கியது குறித்து நீதிபதி கேட்டதற்கு முறையான பதில் எதுவும் அளிக்காமல் அதனை மாற்றி 50 ரூபாய் டிக்கெட் கொடுத்துள்ளார். இதே போன்று மற்ற நபர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படுவதை பார்த்த நீதிபதி செயல் அலுவலரிடம் புகார் அளிக்க சென்றார். அப்போது செயல் அலுவலர் அங்கு இல்லாததால் அவரது தொடர்பு எண்ணை கேட்டுள்ளார். செயல் அலுவலரின் தொடர்பு எண்ணை தர மறுத்த ஊழியர்கள் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புகாரளிக்க செயல் அலுவலரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞருடன், கோயிலின் செயல் அலுவலர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார். அப்போது, முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்த அறிக்கையை ஜனவரி 9-ந் தேதி என்னிடம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், டிக்கெட் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறநிலையத்துறை அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, தரிசன டிக்கெட் சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய 2 பேர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் விற்பனையில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.