தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். இந்த நிலையில் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்று குழந்தைகளுடன் மும்பையில் புதிய வீட்டில் குடியேறி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9 ஆயிரம் சதுர அடியில் ரூ.70 கோடிக்கு புதிய வீட்டை வாங்கி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சூர்யா வெளியே வரும் புகைப்படங்களும், ஓட்டல்களுக்கு சென்று வரும் படங்களும் வெளியாகி வைரலாகிறது. தனது குழந்தைகளை சூர்யா மும்பை பள்ளியில் சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிகா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதற்காகவே மும்பையில் புதிய வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சூர்யா நிரந்தரமாக மும்பையில் குடியேறுகிறாரா? என்று அவரது தரப்பில் விசாரித்தபோது உறுதிப்படுத்தவில்லை.