Skip to content
Home » சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான  காலரி வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

 

இன்று  அதிகாலை முதல் காளைகள் மைதானத்துக்கு வரத்தொடங்கியது.  கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் மருதைராஜ் தலைமையிலான குழுவினர் காளைகளை பரிசோதித்து  தகுதியான காளைகளை போட்டிக்கு தேர்வு செய்தனர்.  டாக்டர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களின் உடல் தகுதியை சோதித்தனர். அத்துடன் வீரர்கள் போதை பொருள் பயன்படுத்தி உள்ளார்களா என்றும்ஆய்வு செய்து தகுதியான வீரர்களை போட்டிக்கு அனுமதித்தனர்.

அதைத்தொடர்ந்து காலை 7.40 மணிக்கு போட்டிகள் தொடங்கியது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் போட்டிக்கு  கொண்டு வரப்பட்டு உள்ளது.

காளைகளை அடக்க 400 வீரர்கள் மைதானத்தில் தயார் நிலையில் உள்ளனர். முதலில் மஞ்சள் டீ சர்ட் அணிந்த காளையர்கள் மைதானத்தில் இறங்கி காளைகளை அடக்கினர்.  போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசாக  பைக்கும், 2ம் பரிசாக பிரிட்ஜூம் வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு போட்டிக்கும் கட்டில், சேர், ரொக்கப்பரிசு, அண்டா  உள்ளிட்ட பரிசுகளும்,  வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கி வருகிறார்கள்.  9 மணி அளவில் முதல் சுற்று போட்டி நடந்தது. முதல் சுற்றுவரை 108 காளைகள் விடப்பட்டது இதில் ஒரு  காளையின் உரிமையாளர் காயமடைந்தார்.  சில காளைகளை மைதானத்தில் சுற்றி சுழன்று கெத்து காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

போட்டியை காண 5 ஆயிரம் மக்கள் திரண்டுள்ளனர்.  எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!