திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு இதில் அனுமதி அளிக்கப்பட்டது. திருச்சி திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன் என்பவரும் தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார். முதன் முதலாக அந்த காளை இப்போது தான் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த காளையை வாடிவாசலுக்கு அனுப்பும் வழியான பட்டிக்குள் அனுப்பினர். அப்போது அதைத்தொடர்ந்து வந்த இன்னொரு காளை செல்லப்பன் காளையை முட்டித் தள்ளியது. பட்டிக்குள் இருந்ததால் சின்னக்காளையான அந்த காளையால் தப்பிக்கவும் முடியவில்லை. பெரிய காளையுடன் எதிர்த்தும் மோத முடியாமல் பல முட்டுகளை தாங்கிய நிலையில் பட்டிக்குள்ளேயே அது உயிரிழந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து, செல்லப்பன் காளை இறந்து விட்டதை உறுதி செய்தவுடன் அங்கிருந்து அந்த காளை கொண்டு செல்லப்பட்டது.