நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் தற்போது தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். பேண்டஸி படமாக தயாராகும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யா. ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது தவிர நடிகர் சூர்யாவுக்கு சுதா கொங்கராவுடன் ஒரு படமும், ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் ஒரு படமும் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சூர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தைப் பற்றி விவாதிக்க அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. சூர்யா – பிருத்விராஜ் நடிப்பில் தயாராகி வரும் பயோபிக் படம் இது என்றும், பிரபல பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவின் நிறுவனர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கையை மையமாக வைத்து பிருத்விராஜ் படத்தை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான லூசிபர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புரோ டாட்டி ஆகியவற்றை இயக்கியுள்ளார்.