திருச்சி அடுத்த பெரிய சூரியூர் பெரிய ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் பங்கேற்றது. இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல பரிசுகளை பெற்ற காளை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியூர் ஜல்லிக்கட்டிலும் இந்த காளையை வீரர்கள் மடக்கி பார்த்தனர். அனால் யாரிடமும் அது பிடி கொடுக்காமல் மைதானத்தில் நின்று சவால்விட்டு ஆடி வெற்றி பெற்றது. அந்த காளைக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்றார். அவர் கொம்பன் காளைக்கான சைக்கிள் பரிசு டோக்கனை காளையின் உரிமையாளர் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்பகரிடம் வழங்கினார்.
அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர். தமிழர் திருநாள் விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டில் அரசியலில் எதிரும் புதிருமான கட்சிகளை சேர்ந்த இருவரும் கைகுலுக்கி கொண்டதை பார்த்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு உரிய ஆணையை ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் விழா மேடையில் அமைச்சர் மகேஸ் வழங்கினார் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக அமையும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்தார்.
போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி எஸ்.பி. செந்தில் நாகரத்தினம் பார்வையிட்டார்.
சூரியூர் ஜல்லிக்கட்டில் 2 சுறறுகள் முடியும் வரை 20 பேர் காயமடைந்தனர். திருச்சி எடத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (38), மணிகண்டத்தைச் சேர்ந்த ராகவன் (28), வாழவந்தான் கோட்டை சேர்ந்த வீரமணி (12) என சிறுவன் உட்பட 3 பார்வையாளர்கள் காயமடைந்தனர்.
திருச்சி அடுத்த கல்லுக் குடியைச் சேர்ந்த மணிகண்டன் (20) சின்ன பாண்டூராபட்டியை சேர்ந்த பாண்டி (21) ஆகிய இரண்டு மாடு பிடி வீரர்கள் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேற் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.