தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர் திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு திருச்சி வந்தபோது ஒரு பெண் எஸ்.பியை தனது காருக்கு அழைத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. ராஜேஸ் தாசுக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜேஸ்தாஸ் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்ததுடன் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் ராஜேஸ் தாஸ் தலைமறைவானார். பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில் தனது தண்டனைக்கு தடை விதிக்கவும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி இருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 ஆண்டு சிறைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், சரண் அடைவதில் இருந்தும் விலக்கு அளித்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.