காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் கடந்த 7-ந்தேதி தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 18-ந்தேதி ஆஜரான மூத்த வக்கீல் சிங்வி, இந்த மனுவை 21 (இன்று) அல்லது 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு 21-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ராகுல் காந்தி வழக்கில் குஜராத் அரசும், எதிர்மனுதாரர் புர்னேஷ் மோடியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.