முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் 240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2 முறை மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜாமீன் மறுத்ததுடன், வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில்பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை செசன்ஸ் கோர்ட்டில் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி , செந்தில் பாலாஜிக்கு வரும் 11ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே 23 முறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது 24வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.