கவா்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தமிழக கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் முடக்கி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்ததுடன், கவர்னர் ரவியையும் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான தீர்ப்பு என்பதால் அனைத்து மாநிலங்களும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளது.
இந்த வழக்கில் திமுக சார்பில் ஆஜராகிய திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி. இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தீர்ப்பு விவரங்கள் குறித்து விளக்கினார். அப்போது முதல்வர் ஸ்டாலின், வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு இனிப்பு ஊட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அதுபோல வில்சனும், முதல்வருக்கு பொன்னாடை அணிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி தமிழக முதல்வருக்கு பல்வேறு மாநில அரசியல்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், தி.க. தலைவர் வீரமணி ஆகியோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது:உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதிகபட்சம் 4 மாதத்தில் ஒப்புதல் கிடைத்து விடும். இந்த தீர்ப்பு மூலம் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.