Skip to content
Home » கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய  வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால  ஜாமீன் கிடைக்காதபட்சத்தில் அவர் நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். எனவே, அரசு நிர்வாகத்தை அவர் தொடர்ந்து நிர்வகிப்பாரா? அல்லது பதவி விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும், சிறையில் இருந்தபடியே வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராக கருதப்படும் அதிஷி தெரிவித்தார். சிறையில் இருந்தே முதல்-மந்திரி தனது பணிகளை செய்வதை தடுக்க எந்தச் சட்டமும் இல்லை, அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், சிறையில் இருந்து முதல்-மந்திரியாக தொடர்ந்து பணியாற்றுவது அரசியலமைப்பு ரீதியாக பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவர் தனது பதவியை மனைவி ரப்ரி தேவியிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கெஜ்ரிவால் தொடர்புடைய விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. கெஜ்ரிவால் அரசு ஊழியர் என்பதால், முதல்-மந்திரி பதவியில் இருந்து அவரை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்யலாம் அல்லது பதவியில் இருந்து நீக்கலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டால் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ? அதே நடைமுறை கெஜ்ரிவால் வழக்கிலும் பின்பற்றப்படும் என  கூறப்படுகிறது.

இதற்கிடையே  கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று 3 நீதிபதிகள் கொண்ட அரசியல்  சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *