பஞ்சாப் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது.
தனி நாடு கோரும் பப்பர் கல்சா என்ற சீக்கிய அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது. இதில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது தில்வார்சிங் என்ற பஞ்சாப் போலீஸ் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிளான ரஜோனா 2-வது மனித வெடிகுண்டாக தயார் நிலையில் இருந்தார்.
ரஜோனா மீதான வழக்கில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி சண்டிகர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. ரஜோனாவை 2012 மார்ச் 31-ல் தூக்கிலிடவும் தேதி குறிக்கப்பட்டது. ஆனால் சீக்கிய தலைவர்களின் அழுத்தங்களால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை.பியாந்த் சிங் படுகொலை வழக்கில் ரஜோனாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டகள் கடந்துவிட்டன.
ரஜோனாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஒன்றிய அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு இன்று கூடிய நிலையில் ஒன்றிய அரசு சார்பில் எப்படி யாரும் ஆஜராகாமல் இருக்கலாம் என்று நீதிபதி கவாய் கேள்வி எழுப்பினார்.
அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,” ரஜோனா வழக்கில் இன்று ஆஜராக இது நேரமல்ல என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ரஜோனா இறந்த பிறகு மனு மீது முடிவு எடுப்பார்களா? ,” என கேள்வி எழுப்பினார். இறுதியாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தூக்கு தண்டனை குற்றவாளி ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். 2 வாரத்தில் முடிவு எடுக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் வைக்க அவரது செயலாளருக்கு உத்தரவிடுகிறோம். 2 வாரத்துக்குள் ஜனாதிபதி முடிவு எடுத்து அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே நிவாரணம் அளிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.