டில்லி மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி உள்பட 15 பேரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சஞ்சய் சிங் , தன்னை ஜாமீனில் விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறையை கடுமையாக சாடினார். ஒரு ரூபாய் கூட சஞ்சய் சிங்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை. எந்த ஆவணமும் இல்லாமல் அவரை எப்படி 6 மாதமாக சிறையில் வைத்திருக்கிறீர்கள் என சரமாரியாக நீதிபதி கேள்வி கேட்டார். நீதிபதி எழுப்பியகேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் திணறினார். பதில் அளிக்க நாளை வரை அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.
அமலாக்கத்துறையின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி சஞ்சய்சிங்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை தொடர்ந்த டில்லி மதுபான கொள்கை வழக்கில் இப்போது தான் முதன் முதலாக ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் சிங் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.