Skip to content
Home » ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Senthil

ஈஷா யோகா மையம் 1992-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.  இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள்  கடந்த 2 நாளாக சோதனை நடத்தினர்.

ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு முதல்நாள்  9 மணி நேரம் சோதனை நடத்தியது. துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார், எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

யாரையும் திருமணம் செய்து கொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை என்று ஈஷா யோகா மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் சிலரின் இருப்பிடமாக இருக்கிறது என்று அந்த மையம் கூறுகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்டு தருமாறு கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் வேளாண் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர். அவருக்கு 42 வயதிலும், 39 வயதிலும் மகள்கள் உள்ளனர்.

அவரது மூத்த மகள் மெக்கட்ரானிக்ஸ் படிப்பில் இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த அவர், திருமணம் செய்து பின் 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அவர் ஈஷா மையத்தில் இணைந்தார்.

மென்பொருள் பொறியாளரான இளைய மகளும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரும் பின்பு ஈஷா மையத்தில் இணைந்தார். தற்போது இருவரும் ஈஷா மையத்தில் தங்கியிருக்கின்றனர்.

தனது மகள்களுக்கு “மருந்துகள் கொடுத்து அவர்களது மூளையின் செயல்பாட்டை குறைத்து” விட்டதாகவும் இதனால் குடும்பத்துடன் எந்த உறவையும் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை எனவும் காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

ஈஷா மையத்துக்கு வருபவர்கள் சிலரை அவர்கள் மூளைச்சலவை செய்து, சந்நியாசிகளாக மாற்றுகின்றனர் என்றும் பெற்றோர்கள் சந்திக்கக் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் காமராஜ் தெரிவித்திருந்தார்.

அந்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது போக்சோ வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜூன் 15-ம் தேதி மாலை 6 மணியளவில், அவரது மூத்த மகள் அவரை அழைத்து பேசியதாகவும், அப்போது ஈஷா யோகா மையத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்குகளை  வாபஸ் வாங்கும் வரை தனது இளைய மகள் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காமராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது அவரது மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தனது மகள்கள் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக காமராஜ் கூறும் நிலையில், தாங்கள் சுய விருப்பத்துடன் அங்கு தங்கி வருவதாகவும் தங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் மகள்கள் தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே ராஜேந்திர குமார், வயது வந்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து, முடிவு எடுக்க உரிமை உண்டு என்று வாதாடினார்.

நீதிமன்றம் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது தேவையற்றது என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த வழக்கை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஈஷா மையத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், “தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிற பெண்களை மொட்டை அடித்து, சந்நியாசிகளாக” யோகா மையங்களில் வாழ ஏன் ஊக்குவிக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பெண்களிடம், “நீங்கள் ஆன்மிகப் பாதையில் செல்வதாக கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்களை புறந்தள்ளுவது பாவம் என்று தோன்றவில்லையா?” என்று நீதிபதிகள் கேட்டனர்.

நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், வழக்கு தொடுத்தவர் மற்றும் ஈஷா மையத்தில் இருக்கும் இரு பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் ‘தீவிரத்தன்மையை’ கருத்தில் கொண்டும், காவலில் இருப்பவர்கள் தங்கள் முன் ‘பேசிய விதத்தை’ வைத்துப் பார்க்கும் போதும், ‘குற்றச்சாட்டுகளின் பின் உள்ள உண்மையை கண்டறிய மேலும் ஆராய வேண்டியுள்ளது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை புறநகர் காவல்துறையினர் ஈஷா மையம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த நிலையில் இன்று ஈஷா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்தரசூட் அமர்வில் இன்று  மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கை விரைந்து முடீக்க வேண்டும் என்று கேட்டிருந்தபோதிலும்,  பேராசிரியர் காமராஜின் இரு மகள்களும் நேரில ஆஜராகி  விளக்கம் அளித்தனர். தங்கள் சுயவிருப்பத்தின்படி அங்கு இருப்பதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி  உத்தரவு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!