தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்ட்டிரிய கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கும், ஆளுநர் தமிழிசைக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் தெலங்கானா தலைமை செயலாளர் சாந்திகுமாரி சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மாநில மோட்டார் வாகன வரி மசோதா, உள்பட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 2022ம் ஆண்டு செப்.14ம் தேதி முதல் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையை செய்யாமல் ஆளுநர் தாமதிப்பதால் அதனை வழக்கத்துக்கு மாறான, சட்ட விரோதமான அரசியலைமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தெலங்கானா அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள அத்தனை ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் சரியான வழிகாட்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில ஆம் ஆத்மி அரசு அண்மையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.