ஏற்கனவே சுப்புனிக்காப்பி கடைபெஞ்சில் ஏற்கனவே சந்துக்கடை காஜா பாய், பொன்மலை சகாயம் இருவரும் காப்பி குடித்துக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி‘ ஒரு சீனியா் வந்து இருக்கேன் தள்ளி உட்காரு ஓய்..’. எனகூற இருவரும் திரும்பி பார்த்தனர். ‘ பார்த்தா இங்க சீனியர்-ஜூனியரெல்லாம் இல்ல எல்லாத்துக்கும் ஒரே பிரச்சனை தான்’ என பொடி வைத்து சகாயம் பேச.. ‘ என்ன சகாயம் சொல்ல வர்ற’ என இருவரும் ஆர்வமுடன் கேட்க தயாராக, ‘முதலில் ஜூனியர் அமைச்சருக்கு நெருக்கமானவர் பற்றி சொல்றேன், திருச்சிக்கு பக்கத்து மாவட்டத்துல வாத்தியாரா வேல பாக்குறவரு அவர். கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியாருங்களுக்கான பிரச்சனைகளை கவனித்து கவுன்சிலிங் செய்ய ஒரு அமைப்பை ஆரம்பிச்சவர் அவர். தன்னுடைய பெயரோடு எவரெஸ்ட் பெயர சேத்துகிட்டார். வாத்தியாருங்களுடைய மனச கவனிக்க வந்தவர் இப்போ அமைச்சருக்கு ரொம்ப நெருக்கமாகிட்டாருனு சொல்றாங்க. திருச்சி சிட்டியில ஒரு ஆபீஸ் போட்டுகிட்டு வேலய பாக்குறார். கிட்டத்தட்ட ஒரு வருஷமா வாத்தியார் வேலயே பாக்கலனு சொல்றாங்க அந்த ஊர்காரங்க. சரி வாத்தியாருங்களுடைய மனச பாக்க வந்தவர் இப்ப வாத்தியாருங்க டிரான்ஸபர் வரை கவனிக்க ஆரம்பிச்சுட்டாருனு ஒரு தரப்பு சொல்றாங்க. இந்த விஷயங்கள் அமைச்சருக்கு தெரியமானு தெரியலனு அவங்க புலம்புறாங்க’ என சகாயம் பொறிந்து தள்ளினார்.
‘ சகாயம் சொன்ன அந்த மனுசு காரர பத்தி நான் ஒண்ணு சொல்லட்டா.. போன வருஷம் அவருடைய பெயர் விருதுக்கு ரெக்கமெண்டேசன் ஆகி போய் இருக்கு, இந்த விஷயம் தெரிந்து மத்த வாத்தியாருங்க பொங்கிட்டாங்களாம்.. மாச கணக்கா வாத்தியார் வேலைக்கே வரதுல்ல, இதுல விருது வேறவையா என கொதிக்க கடைசி நேரத்துல அந்த லிஸட்டுலேந்து அந்த மனுசுக்காருடைய பெயர எடுத்துட்டாங்களாம்’ என சொச்ச கதையை சொல்லி முடித்தார் ஸ்ரீரங்கம் பார்த்தா. ‘ சரி ஜூனியர கிட்ட இருக்குறவர பத்தி சொன்ன, சீனியர் கிட்ட இருக்குறவர பத்தி என்ன மேட்டர்?’ என சந்துக்கடை காஜா பாய் ஆர்வமாக கேட்டார். ‘ சென்னையில அவரோட வீட்டுல ஒர்க் பண்ண திருச்சிகார பையனுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சது, கல்யாணம் பிக்ஸ் ஆன உடனேயே அந்த பையன கூப்பிட்டு கல்யாணத்த சிட்டியில நடத்தாத, ஒங்க ஊர்லையே நடத்துனு சீனியர் அட்வைஸ் பண்ணியிருக்கார். ஏற்கனவே வீடு கட்டுன விஷயத்துல பல பேர் உன்மேல கண்ணு, இப்ப சிட்டிக்குல கல்யாணம்னா தேவயில்லாத விஷயம்னு சொல்லியும் அந்த பையன் கேட்கலையாம். என்ன செய்ய நம்ம கிட்ட இருக்குற பையன் ஆச்சேனு கல்யாணத்த நடத்தி கொடுத்து இருக்கார் சீனியர்’ என ஒரே மூச்சில் சகாயம் சொல்லி முடித்தார். இப்படியாக கதை கேட்ட சுவாரசியத்துல காஜாபாயும், பார்த்தாவும் காசு கொடுக்காம சர்ர்னு டூவீலர கிளப்பிட்டு போக, ‘அடப்பாவிங்களானு’ சொல்லிட்டு 3 காப்பிக்கடைக்கு காசு கொடுத்துட்டு கிளம்பினார் பொன்மலை சகாயம்..