தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004-ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன் 18ம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் 18ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் கூடி யாகம் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர். தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி வழிபட்டனர். இதேபோல் சந்திர பாடி மீனவ மக்கள் ஊர்வலமாக வந்து நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் , திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா எம் முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பாஜக மாவட்ட தலைவர் அகோரம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.