திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான இந்திரா பவனில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவை மீட்கவும், நாட்டை காப்பாற்றவும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். மோடியும், பா.ஜனதாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். ஆர்.எஸ்.எஸ். பின்பலத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இந்த தேர்தலின் நோக்கமாக இருக்க வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் 3-வது இடத்துக்கு செல்வார்கள்.
நான் உடல் நிலை காரணமாக எங்கும் பிரசாரத்துக்கு செல்லவில்லை. பத்தனம்திட்டா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யாவிட்டாலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆண்டோ அந்தோணி அமோக வெற்றி பெறுவார். அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் எனது மகன் (அனில் அந்தோணி) தோல்வி அடைவார். காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பா.ஜனதாவில் சேர்வது தவறு. எனது மகன் பற்றி அதிகம் பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.கே.அந்தோணியின்இந்த பேட்டிக்கு பதில் அளித்து அவரது மகன் அனில் அந்தோணி கூறியதாவது:அவரை (ஏ.கே.அந்தோணி) நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். அவர் தேச விரோத காங்கிரஸ் குடும்பத்துக்காக பேசுகிறார். முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி முதியோர்களின் கூடாரம். ஜூன் 4-ந் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆட்சிக்கு வருவார். அப்போது சூரியனை பார்த்து குரைக்கும் நாய்கள் போல் இந்த முதியோர் கூட்டம் குரைத்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.