தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை எழுப்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் சென்றபோது அதில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவரும், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
தேர்தல் செலவுகளுக்காக நயினார் நாகேந்திரன் உத்தரவின் பேரிலேயே பணத்தை நெல்லைக்கு கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், 4 கோடி ரூபாய் சிக்கிய வழக்கில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணி இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த 4 கோடி பணத்தை பாஜக தான் கொடுத்ததாக கிடைத்த தகவலின்படி அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இந்த நிலையில் கோவையில் உள்ள வீட்டில் இருந்த சேகரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.