கோடையின் உச்சம் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. இது வரும் 29ம் தேதி வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தமிழகத்திலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரத்தின் தொடக்க நாளான இன்று காலையில் வெயில் ஓரளவு காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் கோரம் குறையத்தொடங்கியதுடன் திடீரென மாலை 3.45 மணி அளவில் திருச்சியில் சடசடவென மழை கொட்டித்தீர்த்தது. கருமண்டபம்,
ஜங்ஷன், தில்லைநகர், கிராப்பட்டி, ராமச்சந்திரா நகர், மிளகுபாறை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்தது. முசிறி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்றே வருணபகவான் கருணையால் அக்னியின் உக்கிரம் மட்டுப்படுத்தப்பட்டதால் மக்கள் குளிர்ந்த காற்றையும், குளிர்ந்த சூழலையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.