சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, மதுரை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மதியம் வரை மழை கொட்டி வருகிறது.
சென்னையில் இன்று மதியம் கனமழை இடியுடன் கொட்டியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இன்று மதியம் 12 மணி வரை 3 செ.மீ. மழை பதிவானது. தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று இரவு லேசான மழை பெய்த நிலையில் இன்று காலை மழை கனமாக கொட்டித் தீர்த்தது. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை முடிந்ததும் உளுந்து சாகுபடியை தொடங்கி உள்ளனர். சில இடங்களில் உளுந்து பயிர் வளர்ந்து உள்ளது. அந்த பயிருக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மழை நீடித்தால் பயிர் சேதமடைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் மதியம் 12.30 மணி அளவில் லேசாக மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கனமழையாக மாறி பெய்து வருகிறது. அடைமழை காலம் போல கும்மிருட்டாக காணப்படுகிறது. திருச்சி மாநகரில் மழை விடாமல் பெய்து வருவதுடன் குளிர்காற்றும் வீசுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. பாலி என்ற மின்னல் தாக்கியதில் ஓய்வுபெற்ற ஏட்டு காசிலிங்கம் (70) , விவசாயி ராமர்(65) ஆகிய 2 பேர் பலியானார்கள். இவர்கள் அங்குள்ள ஐடிஐ அருகே மழைக்காக ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியது. இதில் சூர்யா என்ற வாலிபர் படுகாயத்துடன் தப்பினாா்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று ஒரே நாளில பெய்த மழை கோடை வெயிலின் வெப்பத்தை தணித்ததுடன் குளிர்ச்சியையும் கொடுத்தது. மக்கள் ஊட்டி, கொனடைக்கானலில் இருப்பது போன்ற குளிர்ச்சியை அனுபவித்தனர்.