இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன. இரட்டை இலை சின்ன வழக்கில் டில்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அமலாக்க அதிகாரிகளும், டில்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்க அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை பல வியப்பூட்டும் தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது.
இதை அடிப்படையாக கொண்டு குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடந்தது. சுகேஷ் சந்திரசேகர் இதற்கு முன்பு எத்தனை கோடிகளை மோசடி செய்திருந்தாலும், இந்த ரூ.200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது. அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம். மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார்.
சிறையில் நடிகைகளை வரவழைத்து பொழுதுபோக்கும் அளவுக்கு சகல வசதிகளுடன் இருந்துள்ளார்.இதற்கெல்லாம் அவருடைய உதவியாளர் பிங்கி இரானி உதவி செய்திருக்கிறார். சுகேஷ், சிறையில் இருந்தவாரே பல நடிகைகளுக்கு காதல், திருமண அழைப்பு விடுத்து உள்ளார். குறிப்பாக பூமி பெட்னேகர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கும் அழைப்பு விடுத்துப் பார்த்துள்ளார். ஆனால் அதுபோன்ற மிக பிரபலங்கள் சுகேசிடம் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஒருசிலர் பரிசுப்பொருட்களை பெற்றதோடு நிறுத்திக்கொண்டதாகவும் தெரிகிறது. இப்படி கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். இந்த வகையில் அவர் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் செலவழித்து இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. பிக் பாஸ் புகழ் நிக்கி தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகியோர் சந்திரசேகரை சிறையில் சந்தித்து உள்ளனர்.
நடிகைகளுக்கு குஸ்ஸி, வெர்சேஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டன் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திகார் சிறைக்குள் சுகேஷ் தன்னிடம் காதலை கூறி திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்தாக நடிகை சாகத் கன்னா தெரிவித்து உள்ளார். படே அச்சே லக்தே ஹைன் என்ற இந்தி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சாகத் கன்னா இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சுகேஷ் சந்திரசேகரை சந்திக்கச் சென்றபோது அவர் ஒரு ஆடம்பரமான சட்டை அணிந்திருந்தார், நிறைய வாசனை திரவியங்கள் உடம்பில் தெளித்திருந்தார், தங்கச் சங்கிலி அணிந்திருந்தார். அவர் தன்னை ஒரு பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் என்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மருமகன் என்றும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் அவர் என்னுடைய ரசிகன் என்றும், எனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான படே அச்சே லக்தே ஹைனைப் பார்த்ததாகவும், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
என்னை ஏன் அங்கு அழைக்கிறீர்கள்? என் ஆறுமாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறேன் என நான் கூறினேன் ஆனால் நான் எதிர்பார்ப்பதற்குள் அவர் ஒரு மண்டியிட்டு, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். நான் அவரிடம் கத்தினேன், ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என கூறினேன். ஆனால் அவர் என் கணவர் எனக்கு சரியான மனிதர் அல்ல என்றும் அவர் என் குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பார் என்றும் கூறினார். நான் மிகவும் வேதனையுடன் அழ ஆரம்பித்தேன். சிறையில் யாரோ வீடியோவை எடுத்து என்னை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தனர்.
அந்த வீடியோவை வெளியிடுவதாக அந்த நபர் என்னிடம் கூறி ரூ.10 லட்சம் பறித்து கொண்டனர். அந்த வீடியோ வெளிவருவதை தான் விரும்பாததால் அதற்கெல்லாம் சம்மதித்தேன். நான் திகார் சிறைக்கு சென்றது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினேன் அது என் திருமணத்தை பாதிக்கும் என்று நான் கவலைப்பட்டேன், அதனால் நான் அவர்களுக்கு பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டேன். இது எனது திருமணத்தை பாதித்தது, நானும் என் கணவரும் பிரிந்தோம் என்று அவர் கூறினார்.