பொங்கல் திருநாளையொட்டி ரேஷன்கடைகளில் அரிசி வாங்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ரேஷனில் ஒரு கரும்பும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். இதுபோல கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திமுக விவசாய சங்கத்தினர் மற்றும் அதிமுகவினரும் கரும்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சுவாமிமலை விமலநாதன் கூறும்போது முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு வழங்கப்படும் என அறிவித்த அரசுக்கும், முதல்வருக்கும் காவிரி உழவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நன்றி என கூறி உள்ளார். இதுதான் விவசாயிகளுக்கு உண்மையான பொங்கல் பரிசு என்றும் அவர் கூறினார்.