மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார்.
அதன்படி, மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது திடீர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து வெளியான மருத்துவமனை அறிக்கையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் இதயத்தில் எவ்வித அடைப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மாண்புமிகு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மக்கள் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.08.2023) அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்ப்பட்டது. உடனடியாக கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.”
“பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary angiogram) இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.