சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக இளைஞரணி மாநாடு வருகிற 21-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டையொட்டி இன்று காலை சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா மேம்பாலம் அமெரிக்க தூதரகம், அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சிங்க பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதை ஒப்படைப்ப இருக்கிறார்கள்.