தற்கொலை செய்து கொண்ட, கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
டிஐஜி தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. “டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை மிகவும் வருந்ததக்கது. அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் ஐஜி சுதாகர், கவுன்சலிங் அளித்துள்ளார். நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கபப்ட்டுள்ளார். மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை என்பதால் அதில் போலீஸ் தலையிட முடியாது எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் மகளிடம் கோவை ராம்நாதபுரம் போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.