கோவையில் விஐபிக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பது ரேஸ்கோர்ஸ். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியான ஆவணங்களைக் கொண்டு ஒரு கும்பல் தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி என்று கூறப்படுகிறது. அரசு ஆவணங்களில் அது அரசு புறம்போக்கு என்று உள்ளது. ஆனால் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வடக்கு கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாவட்ட பதிவாளர் அந்தஸ்தில் இருந்த பெண் அதிகாரி மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் சுருட்டியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் பெண் அதிகாரி ஜெயசுதாவை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். அதேபோல, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காப்புக்காட்டை போலி ஆவணம் மூலம் அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் அந்த சொத்துக்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானது போன்ற ஆவணங்களை தயாரித்து, அதை அடமான பத்திரமாக பதிவு செய்திருப்பதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். விசாரணையில், அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான காப்புகாட்டை போலி ஆவணம் மூலம் அடமான பத்திரமாக பதிவு செய்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் சாந்தியை சஸ்பெண்ட் செய்து, ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணைபோன 2 பதிவுத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.