அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், இரும்புலிக்குறிச்சி ஊராட்சி அரசுப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளி வளாக சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம், பணி முடிவடையும் காலம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளி மாணாக்கர்கள் எவரும் இல்லாததை உறுதி செய்த பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, அரியலூர் – வாலாஜாநகரம் – பர்மா காலனி வழியாக மினி பேருந்து சேவை வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.