சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி ’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கல்வித் திட்ட இலச்சினை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கான ‘நலம் நாடி ’ செயலியை வெளியிட்டார்.
இதன் பின்னர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை, நேரடி பயனாளர் பணப்பரிவர்த்தனைகளையும் வழங்கினார். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் தொடங்கி வைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பேசும்போது, ‘தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘நலம் நாடி’ செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட உள்ளது’ என்றார்.