கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசனிடம் விளக்கம் கேட்டபோது, தான்தோன்றிமலை பிஇஓ நேரில் அனுப்பி விசாரணை செய்யப்படும் என தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.