புதுச்சேரி அடுத்த சூரமங்கல கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவர் அரசு பள்ளியில் படித்து முடித்து கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார், தற்போது கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார், சமூக சேவையின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் ஏழை மாணவர்களின் கல்விக்கு தன்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், குறிப்பாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, நிதி உதவி, அதே போல் 10ம் வகுப்பு தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு விருது வழங்குவது, 10ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு அறுசுவை விருந்துடன் வழியனுப்புவது, உள்ளிட்டவற்றை சொந்த நிதியில் இருந்து செய்து மாணவர்களை ஊக்கபடுத்தி வருகின்றார்,
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் 24 பேர் முடிவெட்டாமல் பள்ளிக்கு வந்துள்ளனர், இதனை பார்த்த அவர் அவர்களை அழைத்து முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார், ஆனால் அவர்கள் தொடர்ந்து அதே போன்று வந்துள்ளனர். இது குறித்து மாணவர்களை அழைத்து விசாரித்தபோது, முடிவெட்டக்கூட பணமில்லை எனவும் சிலர் தங்களின் பெற்றோர் வெளியூருக்கு கூலி தொழிலுக்கு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர், உடனே முடிதிருத்தும் நபரை பள்ளிக்கே அழைத்து வந்த ஆசிரியர் கிருஷ்ணசாமி, பள்ளி வகுப்பறையிலயே வைத்து ஒரு மாணவர்க்கு ரூ. 80 செலவு செய்து முடி திருத்தம் செய்து விட்டுள்ளார், இந்த வீடியோவானது தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூடுதல் வகுப்புக்கு வரவைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தலை வாழை இலையில் கமகமக்க பிரியாணியும், கலை நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புடவைகள், யூனிஃபார்ம்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். தான் அரசு பள்ளியில் படித்ததன் காரணமாகவே அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்த ஆசிரியர் முயற்சி மேற்கொண்டு வருவது அனைவரையும் பாராட்டையும் பெற்று வருகிறது.