தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது. அதே போல், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு அரசும், மருத்துவ கல்வி இயக்குநரகமும் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள்படி மருத்துவ கல்லூரிகளுக்கான விதிகள் தற்போது வரை முடிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் இடம், 21 துறைகள் இருக்க வேண்டும். 10 லட்சம் மக்கள் தொகை இருக்கக்கூடிய பகுதியில் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளின்படி 6 மருத்துவ கல்லூரிகளுக்கான தயார் நிலை எட்டப்பட்டிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் பல நிபந்தனைகளும் மாற்றப்பட்டிருப்பதனால் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இதற்கான விண்ணப்பம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வழங்க இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.