கரூர் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார் காற்றாலை மின் வழிப் பாதை அமைப்பதற்கு பணி நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், மேலும் மின் பாதையை மாற்று வழி பாதையில் அமைக்க கோரி மஞ்ச நாயக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சார்ந்த வளர்மதி கூறுகையில்: மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும் ஆடுமாடுகள் மற்றும் தட்டைகளை ஏற்றி வரும்போது ஒருபுறம் சோலார் மின் பாதை, மற்றொருபுறம் காற்றாலை மின் பாதை இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் காற்றாலை மின் பாதையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். இந்த புகார்குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.