திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைச் செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இந்த பகுதிக்கு 39 தெருவிளக்குகள் அமைத்துக்கொடுத்த மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கும், 47-வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதனுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாதாள சாக்கடை அமைக்கும் முன், மொராய்ஸ் கார்டன் ரன்வேநகர் பகுதிக்கு குடிநீர் இணைப்பு, மழைநீர் வடிகால், தார் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. குடியிருப்பை சிறப்பிடமாக்கும் முயற்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சமூதாய கூடம், குழந்தைகள் பூங்கா, வழிபாட்டு தலங்கள், கண்காணிப்பு கேமரா வசதிகள் அடங்கிய குடியிருப்பு வளாகமாக ரன்வேநகரை மாற்றம் செய்வது, உறுப்பினர் சேர்க்கையையும், சந்தா வசூலையும் தீவிரப்படுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.