நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே பைக்கில் சென்றவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சாலை விதிகளை மீறி பைக்கில் சென்றவாறு குளித்துக்கொண்டு பிறருக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சிதம்பரம், தஞ்சை என பல இடங்களில் இதுபோல வீடியோ வெளியிட்டனர். தஞ்சை போலீசார் வீடியோ வெளியிட்ட இருவரையும் பிடித்து தலா ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். இதனால் தமிழகத்தில் இனி யாரும் இந்த வேடிக்கை காட்டமாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் உல்ஹஸ்நகரில் உள்ள சிக்னலில் ஸ்கூட்டரில் வந்த ஆண் மற்றும் பெண் நடுரோட்டில் குளித்தவாறு பயணம் செய்தனர். ஆணும் பெண்ணும் ஸ்கூட்டரில் இருந்துகொண்டே தண்ணீரை தலையில் ஊற்றி குளித்துக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்கூட்டர் எண்ணை அடிப்படையாக கொண்டு அதன் உரிமையாளர் மீது அபாராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.