தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் கேட்டு பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முதல்வருக்கு விளக்கிக் கூறினார்.
இந்த ஆய்வின் போது, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் காணொலி காட்சி வாயிலாக நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ள நிலையில் இந்த ஆய்வுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.