வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல், மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாகை உள்ளிட்ட 14,கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆவடியில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 27 பேர் நாகை வந்தனர். கனமழை பெய்யும்போது தாழ்வான பகுதிகளில் வீடுகளில் சிக்கிக் கொள்ளும் மக்களை மீட்பதற்கு தேவையான ரப்பர் படகுகள், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால், அதனை அப்புறப்படுத்த இயந்திர ரம்பம் மற்றும் தேங்கும் வெள்ளநீரை வெளியேற்ற, நீர் மூழ்கி பம்புகள் என 15 வகையான உபகரணங்களுடன் தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.