நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்று, வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்பிக்களும் கலந்து கொண்டனர். இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோவைக்கு கடந்த முறை வந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தேர்தல் பரப்புரைக்காக வந்த போது எவ்வளவு சிறப்பாகக் கூட்டம் நடைபெற்றதோ அதைவிடச் சிறப்பான வெற்றியையும் கொடுத்து மிகப்பிரமாண்டமாக இந்த வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இங்கே நான் கலந்து கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து Close’ செய்துவிட்டார். சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த வெற்றிவிழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல, இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. இது சாதாரண வெற்றி இல்லை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களே தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றி. புதிய வரலாற்றைப் படைப்பதற்கான வெற்றி.
2004ல் நாம் 40க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அதிமுக மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சிலர் சொன்னார்கள் அது அதிருப்தி என்றால், 2024ல் பெற்றிருக்கின்ற 40க்கு 40 வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி. நம்முடைய தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன, கொள்கை உறவோடு கடந்த ஐந்து தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் தொடருகின்ற நம்முடைய கூட்டணி ஒற்றுமைதான். இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையில் இருப்பது வெறும் தேர்தல் உறவு கிடையாது; கொள்கை உறவு.
இங்கே மட்டுமில்லை, 2023ல் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்திலேயே அகில இந்திய தலைவர்கள் அருகில் வைத்துக் கொண்டே “காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது” என்று மேடையில் அறிவித்தேன். அதனுடைய விளைவாகத்தான், 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். உடனே இந்த கூட்டணி ஒன்று சேரக் கூடாது என்று என்னவெல்லாம் செய்தார்கள் . ஒவ்வொரு கட்சிகளையும் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். டில்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் கைது செய்தார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் அறிவித்த பிறகு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவது போன்று பாஜவினர் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரபிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள்.
ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ் ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பாஜ வாங்கியது எவ்வளவு? 240 தான் இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை மோடியின் தோல்வி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தந்திருக்காவிட்டால் மெஜாரிட்டி ஏது அவர்களால் தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார். நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு அதிகப் பெரும்பான்மை இருந்தபோதே, தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இப்போது மைனாரிட்டி பாஜக அரசு இருக்கும்போது அடங்கிப் போவார்களா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கின்ற பாஜவை தடுக்கின்ற காவல் அரணாக நம்முடைய 40 எம்.பி.க்களும் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது என்று உளறிக்கொண்டு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சிதம்பரம் கூட்டத்தில் ஒன்றைச் சொன்னேன். “சட்டமன்றத் தேர்தல் வரட்டும். அ.தி.மு.கவிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே திமுக பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்ய இருக்கிற நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறேன்” என்று சிதம்பரத்தில் பேசினேன். பழனிசாமி அவர்களே இப்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால், தி.மு.க. கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகித்திருக்கிறது. அடுத்து, இன்னும் சிறிது நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும், நம்முடைய கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். தொடர் வெற்றியால் எனக்கு மமதை வந்துவிடவில்லை.
ஆணவம் ஏற்படவில்லை, மாறாக எனக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், “எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது! உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை! எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் உங்களுக்கு செலுத்தும் நன்றி!” அந்த நன்றி உணர்வுடன் சொல்கிறேன், இனி தமிழ்நாட்டில் எப்போதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது” என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்த வெற்றிவிழா கட்டியம் கூறட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.