காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மின்னணு வாகனங்கள், தோல் சார்ந்த காலணி, வங்கி, நிதி, காப்பீடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனங்கள் எண்ணிக்கை 7,33,296-ஆக உயர்ந்துள்ளது; 47,14,148 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்ட ஒரு மாநிலம். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை பெற்று வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த ஓராண்டில் 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. யார் மறைத்தாலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது. தமிழ்நாட்டில் தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் டாடாவிற்கு நன்றி. தமிழ்நாட்டில் உள்ள இளைய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஐடிஐ மாணவர்களுக்கு உலகத்தர பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,400 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மின்சார பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.